பெட்டாலிங் ஜெயா, அக். 10-
இன்றைய வேகமான தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப பெண்கள் தங்களது வாழ்க்கை மற்றும் தொழில் தேர்வுகளில் தெளிவான சிந்தனையுடன் செயல்படுவதுடன், பல்துறை திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
சென்னை, இந்தியாவில் உள்ள எம்.ஓ.பி. வைஷ்ணவ் கல்லூரியில் எம்.பி.ஏ. பயிலும் 18 முதல் 23 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்காக நடத்தப்பட்ட சிறப்பு சந்திப்பில் இந்த கருத்து முன்வைக்கப்பட்டது. மகளிரின் வாழ்க்கை, கல்வி, தொழில் வாய்ப்புகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு அனுபவங்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக அதன் ஏற்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளரும் புக்கிட் காசிங் மஇகா கிளைத் தலைவருமான டத்தோ கீதாஞ்சலி ஜீ கூறினார்.

மலேசிய இந்திய காங்கிரஸ் புக்கிட் காசிங் கிளை சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு மலேசிய இந்திய இளைஞர் மன்றம் உட்பட அமைப்புகள் இணைந்து ஆதரவு வழங்கின. நிகழ்ச்சியில் தயாரிப்பாளரும் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான ஷாலினி பிரியமோகன், மலாயா பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவ நுண்ணுயிரியல் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் சந்திரமதி உள்ளிட்டோர் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்டு மாணவிகளுடன் தங்களது அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கீதாஞ்சலி ஜீ, இளம் பெண்கள் தங்களுக்கான தொழில் பாதையை தேர்வு செய்யும்போது கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்துடன் தனிப்பட்ட பண்பு, ஆளுமை மற்றும் வாழ்க்கைச் சமநிலைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார். முன்னொரு காலத்தில் வாழ்க்கையில் ஓரளவு இடைவெளி இருந்தது. நின்று நிதானமாக சிந்திக்கவும், சூழ்நிலைகளை புரிந்து கொள்ளவும் நேரம் இருந்தது. ஆனால் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி, சமூக ஊடகங்கள் மற்றும் வேகமான வாழ்க்கை முறையால் அந்த இடைவெளி குறைந்து விட்டது.
எனவே இளம் பெண்கள் தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றி தெளிவாக சிந்தித்து, தங்களுக்கு ஏற்ற கல்வி மற்றும் தொழிலை தேர்வு செய்வதுடன், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தங்களைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும். தொழில் வெற்றி மட்டுமல்லாமல், நல்ல பண்பு, ஆளுமை மற்றும் பொருளாதார சுயநிலையையும் ஒருங்கிணைத்து வாழ்வதே முக்கியம். பெண்கள் ஒரு துறையில் மட்டும் தங்களை மட்டுப்படுத்திக் கொள்ளாமல் பல்துறை திறன்களைக் கொண்டவர்களாக உருவாக வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும் என்று அவர் கூறினார்
