கோலாலம்பூர்,
புற்றுநோய் ஏற்படுவதற்கு முன்பே அதனைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் முறையான பரிசோதனைகள் குறித்து மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். வெள்ளம் வரும் முன் அணை போட வேண்டும் என்பதுபோல், நோய் ஏற்படுவதற்கு முன்பே அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.
அதன் அடிப்படையில், மலேசிய தேசிய புற்றுநோய் சங்கம் பல்வேறு ஆக்கப்பூர்வமான விழிப்புணர்வு மற்றும் சமூக நல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அச்சங்கத்தின் சமூக நலத் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் கே.டி. அல்டிமேட் அட்வசரி தொடர்ந்து பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மலேசிய தேசிய புற்றுநோய் சங்கத்தின் மண்டபத்தில் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிவதன் முக்கியத்துவமும், புற்றுநோயாளிகளுக்கு சமூக ஆதரவு வழங்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

இதில் 50 பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும், மலேசிய தேசிய புற்றுநோய் சங்கத்தின் சமூக நலச் செயல்பாடுகளுக்கு கே.டி. அல்டிமேட் அட்வசரி தொடர்ந்து பக்கபலமாக இருக்கும் என்று அதன் நிர்வாக இயக்குநர் கோகுலநாதன் கூறினார். அதேவேளை சங்கத்தின் இயக்குநர் டாக்டர் முரளிதரனுக்கும் தனது நன்றியை அவர் தெரிவித்துக் கொண்டார். சங்கத்தின் சமூக நலச் செயல்திட்டங்களுக்கு உதவும் வகையில் கே.டி. அல்டிமேட் அட்வசரி சார்பில் 10,000 வெள்ளி நிதியுதவியும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மலேசிய தேசிய புற்றுநோய் சங்கத்தின் இயக்குநர், நிர்வாகிகள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

