கோலாலம்பூர். ஆக.21-
மலேசிய இந்திய சமூகத்தின் கல்வி, நலன், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அரசு சாரா அமைப்புகள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளிடம் தொடர்ந்து கருத்துகள் பெறப்பட்டு வருவதாக பெர்சாமா கட்சியின் தலைவர் ரஃபிஸி ரம்லி தெரிவித்தார்.
இந்திய சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதுடன், அவற்றுக்கான தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதே முக்கிய சவாலாக உள்ளது.
இந்நிலையில் “பல பரிந்துரைகள் ஏற்கெனவே முன்வைக்கப்பட்டுள்ளன. தற்போது நடைபெற்று வரும் கலந்துரையாடல்கள் மூலம் பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் திட்டங்களையும் பெற்றுக்கொண்டு, அவற்றை ஒருங்கிணைத்து எங்களது கொள்கை ஆவணங்களை மேலும் செம்மைப்படுத்தி வருகிறோம் என்றார்.
இந்திய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசு சாரா அமைப்புகள் மற்றும் பல்வேறு தரப்பினருடன் தொடர்ந்து கலந்துரையாடி, அவர்களின் கருத்துகளைப் பெற்று கொள்கை ஆவணத்தை இறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய மற்றும் சிறிய அரசியல் கட்சியாக இருந்தாலும், இந்திய சமூகத்தின் நலன் தொடர்பான பிரச்சினைகளை தேசிய அளவிலான அரசியல் விவாதத்திற்கு கொண்டு வருவதில் தங்களுக்கும் முக்கிய பங்கு இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
“இந்திய சமூகத்தின் பிரச்சினைகளை இந்தியர்களிடம் மட்டுமல்லாமல், அனைத்து மலேசியர்களுக்கும் புரியும் வகையில் தெளிவாக எடுத்துரைக்க விரும்புகிறோம். இதன் மூலம் பெரிய அரசியல் கட்சிகளும் இந்த விவகாரங்களில் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவும், உரிய நடவடிக்கைகளை முன்வைக்கவும் அழுத்தம் ஏற்படும் என்றார்.
தற்போது கொள்கை ஆவணங்களை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அவை படிப்படியாக வெளியிடப்பட்டு இறுதியில் கட்சியின் முழுமையான கொள்கை மற்றும் தேர்தல் அறிக்கையாக உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மலேசிய சமூகத்தில் பொருளாதாரம், சமூக நலன் மற்றும் வாழ்க்கைத் தரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேம்பாடுகள் தேவைப்படுவதாகவும், அவற்றில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவது அனைத்து மலேசியர்களுக்கும் பயனளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, ஒவ்வொரு சமூகத்திற்கும் அதன் தனித்துவமான பிரச்சினைகள் இருப்பதால், குறிப்பிட்ட சமூகங்களின் தேவைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய அவசியமும் உள்ளது என்றார்.
“மலேசியாவை வலுவான எதிர்காலத்தை நோக்கி கட்டியெழுப்புவதற்கு அனைத்து தரப்பினரின் அனுபவமும் பங்களிப்பும் அவசியம். இதில் நாட்டின் வளர்ச்சிக்கு நீண்டகாலமாக பங்களித்து வரும் இந்திய சமூகத்திற்கும் முக்கிய பங்கு உள்ளது என்றார்.
இந்திய சிறுபான்மை சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சரியான முறையில் வெளிப்படுத்துவதுடன், அவற்றை மலேசியர்களுக்கான பரந்த அரசியல் விவாதத்தின் ஒரு பகுதியாக மாற்றுவது தங்களது நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தாங்கள் வெளியிடவுள்ள கொள்கை ஆவணம் இந்திய சமூகத்தினர், அரசு மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் குறிப்பிட்ட அளவிலான விவாதத்தை உருவாக்கும் என்றும், அதன் மூலம் இந்திய சமூகத்தின் நலன் மற்றும் அவர்களுக்கே உரிய பிரச்சினைகளுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்கிடையே பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற பெர்சாமா கட்சியுடனான கலந்துரையாடலில் கிள்ளான் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, தெலுக் இந்தான் முன்னாள் நாடாளும்ன்ற உறுப்பினர் மனோகரன் உட்பட இதர அரசு சாரா இயக்கங்களின் தலைவர்களும்.பொறுப்பாளர்களும் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.